பழனி அவன் எங்கள் நிலத்தின் சாமியாக இருக்கிறான்

பழனி அவன் எங்கள் நிலத்தின் சாமியாக இருக்கிறான்

0

பழனி அவன் எங்கள் நிலத்தின் சாமியாக இருக்கிறான் Ram Vasanth அண்ணே.
___

நான்கு பேர் அறையில் வசித்தோம்.
மூன்று படித்த பட்டதாரிகளும்
ஒரு டூ வீலர் மெக்கானிக் பழனியும்.

பட்டதாரிகளுக்குப் பணியில்லை,
கடுங்காய்ச்சல் அடித்தாலும்
பட்டறைக்குப் போய்
பத்தோ இருபதோ கொண்டுவந்தால்
பசித்த அறை அன்றைய இரவு சாப்பிடும்.
அறைவாசன்கள் அடுத்தநாள்
நேர்முகத்தேர்வு செல்வதற்கும்
பழனியின் சட்டைப்பையைத் துழாவினார்கள்.
அவர்களின் வாரக்கடைசி சினிமா சரக்கு
பழனியின் ஓவர்டைம் அருளியது.
நீண்ட பகலின் தேநீர்ச்சாலை நிலுவைகளும்
பழனியை நம்பியிருந்தது.
பொதுத்தொலைபேசியின் ஒரு ரூபாய்க்கும்
பழனிதான்
நகலகங்களின் ஐம்பது காசுக்கும் அவன்தான்.

பழனி வருத்தப்பட்டு
நாங்கள் பார்த்ததில்லை
பழனி பத்திரிகைகள் படித்தும்
நாங்கள் பார்த்ததில்லை.
நாங்கள் வாசிக்கும் நூல்களின் ஆசிரியர்களை
பழனி கேள்விப்பட்டதில்லை என்பான்.
உலகப் பொருளாதாரத்தில்
வளரும் நாடுகளின் பங்களிப்பை
பற்பசை பிதுங்கும் காலையிலேயே
பேசத் தெரியாதவன்தான் ..
இருந்தும் பின்னிரவில்
மதுக்குவளை ஏந்தியவாறு
புதிய உலகை நிர்மாணிக்க
நாங்கள் போடும் திட்டங்களுக்கு
குறட்டையொலியால்
தன் பலத்த எதிர்ப்பை பதிவு செய்வான் .

மூன்று பேரும் ஆறு மாதங்கள்
பாரமாய் அழுத்தியபோதும்
இன்னும் மீதமிருக்கிறதா
என்பதாகவே பழனியின் சிரிப்பு இருந்தது.
எங்கள் குற்றங்களை
மன்னிப்பதற்கும் அவனதைப் பூணியிருக்கலாம்.

அதீத போதையில் ஒரு நாள்
அவனைக் கட்டியழுத போது
“அட ஏண்ணே.?…
நாளைக்கு நீங்க ஆளானா
என்னைய மறந்துறாதிங்க “..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
அவன் சொல்லியதைப் போலவே
ஆளாகி விட்டோம்.!
நம்மில் யாருக்கேனும் தெரியுமா.?
இப்போது பழனி எங்கிருக்கிறான் என்று…

Leave A Reply

Your email address will not be published.