விசாகப்பட்டினம்: எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் நடந்த வாயு கசிவுக்கு என்ன காரணம்? #GroundReport

வாயு கசிவால் 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எல்ஜி கெம் என்றழைக்கப்படும் தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெமிக்கலின் இந்திய தொழிற்சாலை பிரிவின் கவனக்குறைவே காரணம்

0

வாயு கசிவால் 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எல்ஜி கெம் என்றழைக்கப்படும் தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெமிக்கலின் இந்திய தொழிற்சாலை பிரிவின் கவனக்குறைவே காரணம் என அந்த நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது. நடந்தது என்னஎன்பதை பிபிசி தெலுகு சேவைப்பிரிவின் செய்தியாளர் தீப்தி பத்னி கண்டறிந்தார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ஆலைக்கு அருகே வாழ்ந்துவந்த மக்கள், மே மாதம் 7-ஆம் தேதியன்று அதிகாலையில் அங்கு வீசிய கடுமையான நெடியை உணர்ந்தவாறே கண் விழித்தனர்.

தங்கள் கண்களில் அரிப்பையும், எரிச்சலையும் உணர்ந்த அந்த மக்கள்,தங்கள் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். தங்கள் அண்டை வீட்டாரையும் உடனடியாக வீட்டை விட்டு செல்லும்படி அவர்கள் கூறினர். அந்த நாளின் காலையில் வெளியான காணொளிகள் மக்கள் மூச்சுவிட சிரமப்படுவதையும், வீதிகளில் மயக்கமடைந்த நிலையில் இருந்ததையும் காண்பித்தன.

அந்த பகுதியில் வாழ்ந்துவந்த ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வீடுகளில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் இறந்துள்ளனர். மாடு, எருமை,நாய்கள் உட்பட 32 கால்நடைகளும் இதில் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள், ரசாயன பொருட்களின் தாக்கத்தால் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலையில் இருந்து கசிந்த நச்சுத்தன்மை கொண்ட ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயுவை சுவாசித்த காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கு அடுத்த நாள், இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் மீது கவனக்குறைவால் நிகழ்ந்த மரணங்களுக்காக, கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் குற்றம் என்ற புகாரை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த ஆலையின் ஆய்வு அறிக்கைகள், மற்றும் இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் பணியாளர்களுடன் நடத்திய நேர்காணல்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு பிபிசி தெலுங்குசேவை நடத்திய விசாரணையில் போலீசார் பதிவு செய்த புகாருக்கு ஆதாரம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

தேவையான சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகள் இல்லாமலே இந்த தொழிற்சாலை இயங்கிவந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு எல்ஜி நிறுவனம் பதிலளிக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக அந்த நிறுவனம் ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது.

‘எனக்கு நீதி வேண்டும்’

”எனது மகளின் ஏழாவது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்கள் தான் இருந்தன” என்று என். லதா என்ற பெண் தெரிவித்தார்.

எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் ஆலையின் வெளிப்புற கதவுகளுக்கு அருகே தனது இறந்த குழந்தையின் உடலை ஏந்தியவாறு அவர் நின்றிருந்தார்.

மே 9-ஆம் தேதியன்று அவரும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களும் எல்ஜி ஆலைக்கு வெளியே திரண்டு இந்த ஆலையை மூட வேண்டும் என்று கோரினர். லதாவை போல இந்த வாயுக் கசிவில் தங்கள் உற்றாரை இழந்த சிலர் தங்கள் உற்றாரின் உடல்களை அவ்விடத்துக்கு எடுத்து வந்தனர்.

”நான் எப்படி தொடர்ந்து வாழ்வது? எனக்கு நீதி வேண்டும்” என்கிறார் லதா.

”தயவுசெய்து ஆலையை மூடுங்கள்! எனக்கான நீதியை நீங்கள் வழங்கவேண்டும்” என்று அழுத அவர், அந்த இடத்துக்கு வந்த ஒரு மூத்த போலீஸ் அதிகாரியிடம் முறையிட்டார்.

வாயு கசிவு நிறுத்தப்பட்டு விட்டாலும், அந்த நெடி நீடிக்கிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகே இருந்த மரங்கள் நிறம் மாறியுள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள வாழை மரங்கள் கருப்பு நிறமாக மாறியுள்ளன. அவற்றை தொட்டால் ஒரு கல்லை தொடுவது போல் உணர முடிகிறது.

இந்த பகுதியில் மண், தண்ணீர் மற்றும் காய்கறிகளை சேகரித்து,அதனை பரிசோதனைக்கு அனுப்பி, தற்போது அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

”அதேவேளையில், அழுகும் தன்மை உள்ள உணவுகளை உண்ண வேண்டாம் என்றும், நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் இப்பகுதி மக்களை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். மக்களின் தண்ணீர் பயன்பாட்டுக்கு நாங்கள் டேங்கர் லாரிகளை ஏற்பாடு செய்துள்ளோம்” என்று நகர ஆணையரான ஸ்ரீஜனா கும்மாலா தெரிவித்தார்.

வாயு கசிவுக்கு காரணம் என்ன?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் 24 முதல் முடக்கநிலை அமலில் இருந்துவந்த சூழலில், மீண்டும் இந்த ஆலையை திறக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.

விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் இந்த ஆலை அமைந்திருந்த போதிலும், இதற்கு அருகே பல கிராமங்களும், நெருக்கமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய துறைமுக நகரான விசாகப்பட்டினம், கடந்த சில தசாப்தங்களாக மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

எரியும் தன்மையுள்ள ஸ்டைரீன் திரவத்தின் பாலிமர்களை தயாரிக்ககடந்த 1961-இல் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டது. குளிர்சாதனப்பெட்டிகள், உணவு டப்பாக்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஸ்பூன், தட்டு போன்ற பல பொருட்களில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தயாரிக்க இது உதவுகிறது.

எளிதில் ஆவியாகிவிடும் என்பதால், 20 டிகிரி செல்ஸியசுக்கு கீழான வெப்பநிலையில் தொட்டிகளில் ஸ்டைரீன் பராமரிக்கப்படும். மேலும் இந்த வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், மே7-ஆம் தேதியன்று இந்த வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து அது வாயுக் கசிவுக்கு வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டைரீன் பராமரிக்கப்படும் தொட்டிகளில் வெப்பநிலையை வழக்கமாக 3 ஷிப்ட்களில் பணியாளர்கள் கண்காணித்து வந்த நிலையில்,முடக்கநிலையின்போது ஒரு ஷிப்ட்டில் மட்டுமே பணியாளர்கள் இருந்ததாக பிபிசியிடம் சில தகவல்கள் தெரிவித்தன. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆலைக்குள் செல்ல தாங்கள் 15 எல்ஜி பணியாளர்களுக்கு அனுமதி வழங்கியிருந்ததாக அதிகாரிகள் பிபிசியிடம் கூறினர்.

சைரன் ஏன் ஒலிக்கவில்லை?

”முடக்கநிலை காலத்தில் பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாக கவனக்குறைவு இருந்துள்ளதாக தெரிகிறது, என்று கூறிய ஓர் அதிகாரி, அவசர எச்சரிக்கை அலாரமும் வேலைசெய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய சில உள்ளூர்வாசிகள், சம்பவம் நடந்த காலையில் எந்த எச்சரிக்கை ஒலியையும் கேட்கவில்லையென்றும்,கடந்த 2017-இல் இருந்தே எந்த எச்சரிக்கை ஒலியையும் தாங்கள் கேட்டதில்லை என்றும் தெரிவித்தனர்.

அவசர எச்சரிக்கைக்காகவும், ஓவ்வொரு முறை ஷிப்ட் மாறும்போதும் இந்த சைரன் ஒலிக்கும் வழக்கம் இருந்துவந்ததாக தெரிவித்த சில முன்னாள் ஊழியர்கள், முன்பிருந்த தலைமை இயக்குநர், தினமும் சைரன் ஒலிக்கும் முறையை ரத்து செய்ததாக கூறினார்.

”நீண்ட காலமாக சைரன் பயன்படுத்தப்படாததால், அன்று அது வேலை செய்யவில்லை. ஆய்வு ஒன்றின்போது இதனை நாங்கள் எடுத்துக்கூறியபோது, அந்த அதிகாரி சிரித்துக் கொண்டே போய்விட்டார்” என்றார் ஒரு முன்னாள் ஊழியர்.

”சம்பவம் நடந்த அன்று, சைரன் ஒலித்ததாக நிறுவனம் கூறுகிறது. அப்போது நிலவிய அச்சத்தால்கூட சைரன் ஒலி கேட்காமல் போயிருக்கலாம். இது குறித்த விசாரணை தேவைப்படுகிறது” என்று இந்த இடத்தில் ஆரம்ப சோதனை நடத்திய குழுவில் இடம்பெற்றவரும், தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் உறுப்பினருமான பி. ஜெகன்னாத ராவ் குறிப்பிட்டார்.

முந்தைய ஆய்வு அறிக்கைகள் கூறுவது என்ன?

இந்த தொழிற்சாலையில் பராமரிப்பு மோசமாக இருந்ததை தொழிலாளர் பிரிவு (தொழிற்சாலைகள் துறை) நடத்திய முந்தைய ஆய்வு அறிக்கைகள் மூலமாக பிபிசி கண்டறிந்தது.

ஸ்டைரீன் பராமரிக்கப்படும் 6 தொட்டிகளில் ஒரு தொட்டியின் சிமெண்ட் பூச்சு ”சேதமடைந்துள்ளது மேலும் அதனை சரிசெய்ய வேண்டும்” என2016 ஆகஸ்ட் தேதியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஒரு தொட்டியில் தண்ணீர் தெளிக்கும் பைப்கள் நெளிந்துள்ளதாக2019 டிசம்பரில் வெளிவந்த ஒரு அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த தொட்டிகளில் ஒன்றில் பென்டேன் என்ற நச்சுத்தன்மையுள்ள வாயுவை சேமித்து வைக்க பயன்படுத்துவதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது. மோசமான பராமரிப்பு என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாக உள்ளது.

ஸ்டைரீன் பராமரிக்கப்படும் தொட்டிகளை சுற்றி ஒரு கட்டுப்பாட்டு சுவர் கட்ட வேண்டுமெனவும், பாதுகாப்பு தணிக்கை சோதனை செய்ய வேண்டுமெனவும் இந்த அறிக்கை பரிந்துரைத்தது. இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டதா என்பது தொடர்பான கேள்விகளுக்கு நிறுவனமும்,அதிகாரிகளும் பதிலளிக்கவில்லை.

தேவையான அனுமதிகள் இல்லாமலே இயங்கிய ஆலை

ஸ்டைரீன் பராமரிக்கப்படும் தொட்டிகள் மிகவும் பழைய தொட்டிகள் என்று பிபிசியிடம் தெரிவித்த ராவ், மேலும் கூறுகையில், ”புதிய தொட்டிகளில் சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் உள்ளன. பழைய தொட்டிகளில் இந்த தொழில்நுட்பங்கள் இல்லை. நல்லவேளையாக, சேஃப்டி வால்வ் நன்றாக வேலை செய்தது. இல்லையென்றால் நடந்த விபத்து ஒரு பேரழிவாக இருந்திருக்கும்”என்றார்.

வாயுக் கசிவுக்கு அடுத்து வந்த நாட்களில், கடந்த 2017-இல் இருந்தே எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகள் இல்லாமலே இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

சில புதிய பொருட்களை தயாரிக்க தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய இந்த நிறுவனத்துக்கு அரசிடமிருந்து புதிய அனுமதி தேவைப்பட்டது. இதனை பெற கடந்த 2017 டிசம்பர் 22-ஆம் தேதியன்று ஒரு விண்ணப்பத்தை மத்திய அரசிடம் இந்நிறுவனம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், 2018 ஏப்ரல் 12-ஆம் தேதியன்று இந்த விண்ணப்பத்தை திரும்பப்பெற்ற இந்நிறுவனம், மீண்டும் ஒரு விண்ணப்பத்தை அதேநாளில் சமர்ப்பித்தது. ஆனால் இம்முறை அவர்கள் சமர்ப்பித்தது மத்திய அரசிடம் இல்லை, மாநில அரசிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இரண்டாவது விண்ணப்பத்துடன் ஒரு பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை பிபிசி பார்த்தது.

இந்த விண்ணப்பத்தில் போதுமான அனுமதி இல்லாமல் இயங்கி கொண்டிருப்பதை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த ஒப்புதலை கொண்டே தங்கள் ஆலையின் இயக்கம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை பெறாமலே தங்களின் இயக்கத்தை, செயல்பாடுகளை தொடங்கிய பல நிறுவனங்களில் எல்ஜி நிறுவனமும் ஒன்று. 2017-இல் தொழிற்சாலை இயக்கத்தை தொடங்கிய பிறகு தேவைப்படும் அனுமதிகளை வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தபிறகு இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்கு தேவையான அனுமதி கோரி விண்ணப்பித்தன.

ஆரம்பத்தில் இந்த அனுமதிகளை அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டும் இருந்த நிலையில், 2018 மார்ச்சில் இந்நிலையை மாற்றி மாநில அரசுகளுக்கும் இவற்றை அளிக்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தொழிற்சாலைக்கு தேவையான அனுமதியை இன்னமும் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பெறவில்லை. பிபிசியின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

முக்கியமான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக விமர்சனம் செய்யப்படும் அரசின் மீது விசாகப்பட்டினத்தில் நடந்த சம்பவம் கவனத்தை திருப்பியுள்ளது.

இந்தியாவில் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற அம்சங்கள் மோசமாக இருப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதாலும், விதிமுறைகளை செயல்படுத்துவது மிக மோசமாக உள்ளதாலும் பலமுறை தொழிற்சாலை விபத்துகள் நடந்து அவை செய்தியாகின்றன.

1984-இல் பூச்சிக்கொல்லி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வாயுக் கசிவால் பல ஆயிரம் பேர் இறந்தனர். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இதுதான் மிக மோசமான விபத்து

இஏஎஸ் சர்மா என்ற முன்னாள் அதிகாரியொருவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு தேவையான ஒப்புதல்கள் அளிக்கும் முடிவு, ”கடுமையான தொழில்நுட்ப கண்காணிப்பை தரைமட்டமாக்கிய தவறினை செய்த நிறுவனங்களுக்கு மன்னிப்பை அளிப்பது போல” உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல்பாடுகள் ”மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், சுற்றுச்சூழலை சேதப்படுத்துவதாகவும்”உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட தேவையான சட்ட ரீதியான வாய்ப்புகள் குறித்து உள்ளூர்வாசிகள் அலசி வருகின்றனர்.

”அந்த வாயுவின் நெடியை மற்ற நாட்களிலும் காலை நடைப்பயிற்சியின்போது நாங்கள் உணர்ந்துள்ளோம்” என இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற முரளி அம்பத்தி என்ற உள்ளூர்வாசி தெரிவித்தார்

”முன்பே இது தொடர்பான பிரச்னைகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்”என்று கூறிய அவர், ”மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இது தொடர்பாக புகார் அளித்தோம் . ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.