யேர்மனியில் மீட்கப்பட்டது 5 குழந்தைகளின் உடலங்கள்!!

யேர்மனியில் மீட்கப்பட்டது 5 குழந்தைகளின் உடலங்கள்!!

0

யேர்மனி சோலிங்கன் நகரில் அமைந்துள்ள பொிய குடியிருப்பு ஒன்றில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டில் இருந்து 5 குழந்தைகளின் உடலங்களை காவல்துறையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மீட்டுள்ளனர்.

குழந்தைகளைக் கொன்றுவிட்டு டுசில்டோர்ஃப் தொடருந்து நிலையத்தில் தற்கொலை செய்ய 27 வயதுடைய தாய் முயற்சித்துள்ளதாகக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சோலிங்கன் நரில் உள்ள ஹாசெல்டெல் பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதிக்கு அவசர சேவைகள் 13.45 மணியளவில் வரவழைக்கப்பட்டன.

வீட்டிலிருந்து 5 குழந்தைகளின் உடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் மூன்று பெண் குழந்தைகளும், இரு ஆண் குழுந்தைகளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகள் ஒன்று முதல் எட்டு வயதுடையவர்கள் என்றும் 11 வயதுடைய ஆறாவது குழுந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக 60 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள முன்சன்கிளப்பாக் நகரில் வாழும் அக்குழந்தைகளின் பேத்தியார் அவசர சேவைக்கு தகவல் வழங்கியதாக யேர்மனி ஊடகமான பிட் என்ற செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் வெயாண்ட் தெரிவிக்கையில்:-

குழந்தைகளின் தாய் டுசில்டோர்வ் தொடருந்து நிலையத்தில் தொடருந்துடன் மோதி தற்கொலை செய்ய முன்பட்ட போது தூக்கி எறியப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி தொடர்பில் இதுவரை எதுவும் கண்டறியப்பட்வில்லை. சம்பவம்தொடர்பில் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் தடையவியல் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிற்சை பெற்றுவரும் தாயிடம் சம்பவம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர் என அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அடுக்குமாடித் தொடரின் நுழைவாயில் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் வாகனங்கள் மற்றும் உயிர்காக்கும் காவுவண்டிகள் தெரு முழுவதும் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.